தமிழக பள்ளிக்கல்வியில் தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம். தோல்வி அடைந்த பாடங்களை சிறப்புத் தேர்வு அல்லது பிளஸ் 2 தேர்வின்போது சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்த பாடங்களை, இப்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுடன் சேர்த்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதனுடன் பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்ற பாடங்களை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகளும் தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியானது. மாணவர்கள் உயர்கல்வி செல்ல ஏதுவாக தேர்வுத் துறை மேற்கொண்ட இந்த துரித நடவடிக்கையை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.