அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (ஏப்.15) தொடங்கியது. விண்ணப்பங்கள் மே 6 வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கும் மே 6 ஆம் தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல், கலை-அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தனியார் சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகளுடைய போட்டியைச் சமாளிக்கும் வகையில், அரசு கலை-அறிவியல் கல்லூரிகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்கூட்டியே விண்ணப்ப விநியோகமும், முன்கூட்டியே மாணவர் சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வழக்கமாக மே முதல் வாரத்தில் தொடங்கும் விண்ணப்ப விநியோகம், இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியே தொடங்கப்பட்டு விட்டது.
ஆன்-லைன் விண்ணப்பம்: இந்தச் சூழலில் மாணவர்களின் வசதிக்காக, பெரும்பாலான அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் ஆன்-லைன் விண்ணப்ப முறையை இந்த முறை அறிமுகம் செய்துள்ளன. இதன் மூலம் மாணவர்கள் ஆன்-லைன் மூலமே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 6 கடைசி நாளாகும்.
3 நாள்களில் 1000 விண்ணப்பங்கள் விநியோகம்: விண்ணப்ப விநியோகம் தொடங்கி மூன்று தினங்களே முடிந்துள்ள நிலையில், பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் 1000 விண்ணப்பங்கள் வரை விநியோகம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து, சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராவணன் கூறியது:
விண்ணப்ப விநியோகம் தொடங்கி மூன்று நாள்கள் முடிந்துள்ள நிலையில் 1000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பி.காம். படிப்புக்கே மாணவர்களிடையே ஆர்வம் காணப்படுகிறது. விண்ணப்பங்கள் நேரிலும், ஆன்-லைனிலும் விநியோகிக்கப்படுகிறது. மாநிலக் கல்லூரியில் மே 10 ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கப்பட்டு விடும் என்றார்.
விண்ணப்பக் கட்டணம் உயர்வு: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பக் கட்டணம் இதுவரை ரூ. 27 (விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ.2) என்ற அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இப்போது இந்தக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 (விண்ணப்பக் கட்டணம் ரூ.48 , பதிவுக் கட்டணம் ரூ.2) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பதிவுக் கட்டணமான ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்