உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ஆசிரியர்கள் சார்பாக பத்திரிகையாளனின் விண்ணப்பம்

.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்கள் குறித்து தாங்கள் வெளியிட்டிருக்கும் கருத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன். தாராளமாகச் செய்யுங்கள். ஒரே ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும்.

சொத்து அதிகமாக இருக்கும் ஆசிரியர்களிடம் பிடுங்கிக் கொள்ளுங்கள். தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

அதே சமயத்தில், வீடு வாங்க, வீடு கட்ட, குடும்பத்தாரின் மருத்துவ செலவுக்கு, தங்கை, தம்பி கல்யாணத்திற்கு என பல காரணங்களால் அநியாய வட்டிக்கு கடன் வாங்கி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கடன்களை உடனே ரத்து செய்து விட வேண்டும். ஏனெனில் அவர்களின் நேர்மையை சோதித்து, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டீர்கள் என்பதற்காக...

நீங்கள் கொடுத்திருக்கும் வழிகாட்டுதல் ஆசிரியர்களோடு நிற்கக்கூடாது. உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை என நினைக்கிறேன்.
நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள் கோடி கோடியாக சொத்து சேர்த்திருக்கிறார்கள். கவுன்சிலரிடமே இப்படி எனில் அதன் தலைவர், எம்.எல்.ஏ, எம்.பி க் களை சொல்லவா வேண்டும்.

ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டுமென்று சொன்ன போது, நேர்மையாளர் சகாயம் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து சில நேர்மையான அதிகாரிகள் மட்டுமே சொத்துக் கணக்கை வெளியிட்டனர். மீதமுள்ளோரின் சொத்துக்கணக்குகளை தோண்டச் சொல்லுங்கள்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, கடந்த 2013-ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு நீதிபதியும் தங்களது சொத்துக்கணக்கை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி மேனாள் நீதியரசர். கே.சந்துரு அவர்கள், ஓய்வு பெறும்போது, தனது சொத்துக்கணக்கை தாக்கல் செய்தார். அதன்பிறகு எத்தனை நீதிபதிகள் இதை செய்துள்ளனர்? செய்ய இருக்கின்றனர்?

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள சுகாதார அலுவலர்கள் என்கிற SO-க்கள், உதவிப்பொறியாளர்கள், விஏஓக்கள், ஆர்.ஐ.கள், தாசில்தார்கள், சுங்கத்துறை அலுவலர்கள், கல்வித் துறை அலுவலர்கள் என இவர்கள் சொத்து விவரங்களை கணக்கெடுங்கள் நீதிபதியே...

ஆர்டிஓ, சப் ரெஜிஸ்டார் என நீங்கள் தோண்டி எடுக்க வேண்டிய பட்டியல் மிகப் பெரிது. நான் இங்கு குறிப்பிட்டுள்ள ஆட்களின் சொத்துக்கணக்கை கணக்கெடுங்கள். தமிழ்நாட்டின் பத்து ஆண்டு பட்ஜெட்டை நிவர்த்தி செய்து விடலாம்.

மேற்சொன்ன அனைவரும் சொத்துக்கணக்கில் சுத்தமாக இருந்தார்கள் எனில், அவர்கள் மேல் வீண் பழி சுமத்தியதற்காக என்னை நாடு கடத்துங்கள். -மோ.கணேசன், பத்திரிகையாளன்