குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு



குமரிக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுவதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் 100 டிகிரிக்கு அதிகமாக வெப்ப நிலை பதிவானது. அதிகபட்சமாக, கரூர்பரமத்தி, மதுரை தெற்கு, வேலூரில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவானது.

சேலம், திருத்தணி, திருச்சியில் தலா 104 டிகிரி, மதுரை விமானநிலையம், நாமக்கலில் தலா 102 டிகிரி, கோயம்புத்தூர், தருமபுரியில் தலா 99 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை (ஏப்ரல் 20) வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: பூமத்திய ரேகையொட்டி இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 40 மி.மீ., மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 30 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சேலம் மாவட்டம் ஏற்காடு, சிவகிரியில் தலா 20 மி.மீ. மழை பதிவானது என்றார் அவர்