கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டால் அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்..



புதுக்கோட்டை,ஏப்.13: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டால் அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோடை வெயில் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றது. ஆனால் குழந்தைகள் நலனை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒரு சில பள்ளிகள் தங்களுடைய பெயர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அடுத்த ஆண்டுக்கான பாடத்திட்டத்தை விடுமுறை நாட்களிலேயே வகுப்பு எடுக்க திட்டம் தீட்டி கோடை விடுமுறையிலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்கின்றனர்.

இதுகுறித்த தகவல் கிடைக்கப்பெற்றால் தக்க நடவடிக்கை அந்த பள்ளிகளின் மீது எடுக்கப்படும் என்றும், கோடை விடுமுறை என்பது மாணவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம் என மாணவர்களின் மனநிலையை அறிந்தே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிறப்பு வகுப்புகள் கூடாது என கூறியுள்ளார். மாறாக ஒரு சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பட்சத்தில் அப்பள்ளிகளின் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் கோடைவிடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் ஜீன் 3 ஆம் தேதி திங்கட்கிழமை வழக்கம் போல் செயல்படும்.பள்ளி திறந்த முதல் நாளன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் வழங்கப்படும் .

விடுமுறை நாட்களில் மாணவர்கள் சேர்க்கையை மேம்படுத்த ஆசிரியர் குழுக்களைப் பயன்படுத்தி விளம்பரம் மற்றும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பணிகள் நடைபெற தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியுள்ளார்